‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரஷ்யாவில் வலிமை படப்பிடிப்பை நிறைவு செய்த தல அஜித் பைக் ரைடிங்கில் மிகவும் ஆர்வமுள்ளவர் . இவர் ரஷ்யாவிலிருந்து இந்தியா திரும்புவதற்குள் உலகின் பல இடங்களை 5000 கிலோமீட்டர்கள் நீண்ட பயணம் செய்ய முடிவு செய்துள்ளார் . இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பைக் பயணங்களைச் செய்துள்ள சில பைக் ரைடர்களுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில், ஈரானைச் சேர்ந்த பைக் மேரல் யாசர்லூ என்ற வீராங்கனையிடமிருந்தும் ஆலோசனை பெற்றுவருகிறார். இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள்கூட சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகின.
இந்த நிலையில், நடிகர் அஜித் குறித்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை மேரல் யாசர்லூ பதிவிட்டுள்ளார். அப்பதிவில், “பி.எம்.டபிள்யூ மோட்டார்ஆட் தரப்பிலிருந்து என்னைத் தொடர்புகொண்டு சக ரைடர் அஜித்குமாரை நீங்கள் சந்திக்க வேண்டும் என்றும் அவரிடம் உங்கள் உலக பயணம் பற்றிய அனுபவத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்கள். இருவருக்கும் பொருத்தமான நேரத்தில் சந்திக்க முடிவெடுத்தோம். அவர் இந்தியாவின் தென்பகுதியில் பிரபலமான நடிகர் என்பது எனக்கு தெரியவந்தது. நாங்கள் சந்தித்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகும்வரை அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பது எனக்கு தெரியாது. ஒருவரது தொழில் அடிப்படையில் அவரைப் பற்றிய எந்த முடிவிற்கும் நான் வரமாட்டேன். நம் அனைவருக்கும் வேறுவேறு தொழில்கள் இருக்கின்றன என்பதை உறுதியாக நம்புகிறேன். ஒரு மனிதராக நாம் எப்படி இருக்கிறோம் என்பதே மற்றவர்களிடம் இருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டும். அஜித்துடனான என்னுடைய அனுபவம் சிறப்பாக இருந்ததை தல ரசிகர்களுக்கு கூறிக்கொள்கிறேன். அவர் மிகப்பணிவானர் மற்றும் கனிவானவர். அவரை தெரிந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.