கோழிக்கோடு :

கேரளா மாநிலம் வயநாடு அருகே உள்ள பதின்சரத்தரா என்ற இடத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, போலீசார் அங்கு சென்றபோது ஆறு மாவோயிஸ்டுகள் போலீசாரை தாக்கியுள்ளனர்.

இதனால் போலீசார் என்கவுண்டர் நடத்தினர், இதில் வேல்முருகன் என்ற மாவோயிஸ்ட் உயிர் இழந்தார், இவர் தேனியை சேர்ந்தவர் ஆவார்.

 

அவரது உடல் கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

“இது போலி என்கவுண்டர். மிகவும் நெருக்கத்தில் இருந்து வேல்முருகனை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். இது குறித்து, சென்னை உயர் மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளோம்” என வேல்முருகனின் சகோதரர் முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தேனியிலிருந்து கோழிக்கோடு சென்றுள்ள வேல்முருகன் தாயார் கன்னம்மாள், மகன் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுத காட்சி உருக வைப்பதாக இருந்தது.

வேல்முருகன் என்கவுண்டரில் வீழ்த்தப்பட்டதற்கு அங்குள்ள எதிர்க்கட்சுள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள், ஆட்சிக்கு வந்த பின் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள 8 –வது மாவோயிஸ்ட் வேல்முருகன் ஆவார்.

– பா. பாரதி