சிவகார்த்திகேயன், சந்தானபாரதி, பி.வாசு..பல ரகம்..: ஏழுமலை வெங்கடேசன்
எம்ஜிஆர் முதன்முதலில் கதாநாயனாக நடித்த ராஜகுமாரி (1947) படத்தில் உடன் இருப்பவர், எம்.ஆர் சந்தானம்.. இவர் வேறுயாருமல்ல, இயக்குநர் -நடிகர் சந்தானபாரதியின் தந்தை.. மேலே போங்க, விஷயம் எங்கோ போகும்..
50-களில் நடிகர்திலகம் சிவாஜியின் பெரும்பாலான படங்களில் வலம் வந்தவர். பலே பாண்டியா படத்தில் சிவாஜியின் வளர்ப்பு தந்தையாக வித்தியாசமாக இழுத்து இழுத்து பேசி கலக்கியவர்.
சிவாஜியின் குடும்ப நண்பராய் மிகவும் நெருக்கமாக இருந்த சந்தானம் சிவாஜி தாயார் ராஜாமணி பெயரில் நிறுவனம் ஆரம்பித்து தயாரித்த படம்தான், அண்ணன் தங்கை பாச காவியமாக இன்றளவும் பேசப்படும்…பாசமலர்.
சிவாஜியின் மனைவி கமலா பெயரிலும் பிக்சர்ஸ் தொடங்கி அன்னை இல்லம் படம் தயாரித்தவர்..
உசிலம்பட்டி பக்கத்தை சேர்ந்த எம்ஆர் சந்தானம், தன் மகன்களில் ஒருவருக்கு சிவாஜி என்றே பெயர் வைத்தார். அவர்தான் கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் போலீசா வந்து ”எங்கியோ போயிட்டீங்க சார்” என்று சொல்லும் நடிகர் ஆர்.எஸ்சிவாஜி..
எம்.ஆர்.சந்தானத்தின் மூத்த மகனான சந்தான பாரதி, ஆரம்பத்தில் பாரதி-வாசு என இரட்டை இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர். இதில் வரும் வாசுதான் பின்னாளில், மன்னன்.சின்ன தம்பி. சந்திரமுகி பல பிளாக் பஸ்டர்களை தந்த பி.வாசுவாக மாறியவர்..
இந்த பி.வாசுவின் தந்தைதான் எம்ஜிஆரின் நெம்பர் ஒன் மேக்கப் மேனாக திகழ்ந்த ஜாம்பவான் பீதாம்பரம்.. எம்ஜிஆரிடம் சொல்லி இயக்குர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராக சேர்த்து பாதை அமைத்து கொடுத்தவர். அதற்கு முன்பே ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவந்தவர் சந்தானபாரதி. 1977ல் ஸ்ரீதர் இயக்கி எம்ஜிஆர் நடித்து வெளியான மீனவ நண்பன் படத்தில் சந்தானபாரதியும் பி.வாசுவும் உதவி இயக்குநர்கள். இருவரும் இணைந்தது இந்த படத்தில்தான். இதன் பிறகுதான் தொழிலில் வளர்ச்சி பெற்று, பன்னீர் புஷ்பங்கள் என்ற மெகாஹிட் படத்தை இரட்டை இயக்குநர்களாக கொடுத்தார்கள்.
வியப்பான விஷயம் என்னவென்றால் தந்தையால் அருமையாக களம் கிடைத்த சந்தானபாரதி, பி.வாசு போன்றவர்கள்கூட தங்களின் தந்தைமார்களின் பெருமையை பலரும் அறியும் வகையில் முன்னிலைபடுத்த ஏன் அக்கறை காட்டவில்லை என்பதுதான்..
மேடைக்கு மேடை நடிகர் சிவகார்த்திகேயன் அழுவது ஏற்புடையதில்லை என்றாலும் அவரின் அப்பாவை பற்றி மற்றவர்களிடம் எடுத்துச்செல்கிற அந்த நன்றிக்கடன் குணம், இன்னொரு பக்கம் சாதனையாளர்களான தங்கள் தந்தைமார்களை முன்னிலைப்படுத்தாத சந்தானபாரதி, பி.வாசு போன்ற பலரை நினைவுக்கு கொண்டுவந்துவிடுகிறது.