லண்டன்: இங்கிலாந்து அணியுடன் தோல்வியடைந்த அதே எட்பாஸ்டன் மைதானத்தில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டி நடப்பதால், இந்திய அணி வித்தியாசமான கலவையுடன் களமிறங்கியுள்ளது.

இங்கிலாந்து அணிக்கெதிரான கடந்தப் போட்டியில், இம்மைதானத்தில் சுழற்பந்து வீச்சு எடுபடவில்லை என்பதால், இந்தமுறை யஸ்வேந்திர சாஹல் என்ற ஒரேயொரு சுழற்பந்து வீச்சாளருடன் மட்டுமே களமிறங்கியுள்ளது இந்திய அணி. குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளார்.

புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, பும்ரா மற்றும் பாண்ட்யா ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இப்போட்டியின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்திய உலகக்கோப்பை அணியில் முதன்முதலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். கேதார் ஜாதவ் நீக்கப்பட்டு அவரின் இடத்திற்கு இவர் வந்துள்ளார். வங்கதேசத்திற்கு எதிராக தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடுவார் என்று அணியில் சேர்க்கப்பட்டாலும், இன்றையப் போட்டியில் அவர் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

மேலும், இன்றைய இந்திய அணியில் மொத்தம் 4 விக்கெட் கீப்பர்கள் களமிறங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மகேந்திரசிங் தோனி, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் மற்றும் கே.எல். ராகுல் ஆகிய நால்வருமே விக்கெட் கீப்பர்கள்தான்.

இங்கிலாந்து அணியுடன் ஏற்பட்ட ஒரேயொரு தோல்வி இந்திய அணி நிர்வாகத்தை இப்படி மிரள வைத்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. மேலும், கடந்தப் போட்டியில் காவி ஜெர்சி சீருடையில் விளையாடிய இந்திய அணியினர், இந்தமுறை வழக்கம்போல் பழைய சீருடைக்கே திரும்பியுள்ளனர்.