சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் 12ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று  மநீம கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், அமுமுக தலைவர் டிடிவி தினகரன் உள்பட பல முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி முதல் மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.  வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கட்சி சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர்.

இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட முன்னாள் அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள் உள்பட ஏராளமானோர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில்,  தெற்கு தொகுதியில்  போட்டியிடும் மக்கள் நீதி மய்யம்,தலைவர் கமல்ஹாசன், இன்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முதலாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன, கோவை மாநகராட்சியின் மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதுபோல, அங்கு கமலை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனும்,  காங்கிரஸ் சார்பில் போட்டியிடும மயூரா ஜெயக்குமார், அமமுக சார்பில் துரைச்சாமி போட்டியிடுகிறார் ஆகியோரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

அதுபோல, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்ய சுமார் ஒன்றரை மணியளவில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு  வருகை தந்தார். அங்கு தேர்தல் அதிகாரி சங்கரநாராயணனிடம் தனது வேட்புமனுவை திரு.டிடிவி தினகரன் தாக்கல் செய்தார்.

அதுபோல, அவரை எதிர்த்து போட்டியிடும்,  அமைச்சர் கடம்பூர் ராஜுவும்  வேட்பு மனு தாக்கல் செய்தார்

மேலும், திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

குமாரபாளையம் தொகுதியில் போட்டியிடும் மின்துறை அமைச்சர் தங்கமணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் ஏராளமானோர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.