ஜெருசலேம்: புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கையெழுத்துப் பிரதிகளை, முதன்முதலாக காட்சிக்கு வைத்துள்ளது ஜெருசலேம் நகரிலுள்ள ஹீப்ரு பல்கலைக்கழகம். இந்த கையெழுத்துப் பிரதிகளின் மொத்த எண்ணிக்கை 110.

அந்த கையெழுத்துப் பிரதிகளில், 1944-48 ம் ஆண்டுகளுக்கு இடையில் எழுதப்பட்ட கணித குறிப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த பிரபஞ்ச தியரிக்கான பிற்சேர்க்கைகள் உள்ளிட்டவை அடக்கம்.

ஒருங்கிணைந்த பிரபஞ்ச தியரி பேப்பர்கள், கடந்த 1930ம் ஆண்டு, ஜெர்மனியின் பிரஷ்யன் அகடமி ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்திற்கு, ஐன்ஸ்டீனால் வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரின் ஒரு நிறுவனத்திடமிருந்து, இந்த கையெழுத்துப் பிரதிகளை நன்கொடையாகப் பெற்றுள்ளது ஹீப்ரு பல்கலைக்கழகம். வடக்கு கரோலினாவைச் சேர்ந்த ஒரு தனியார் சேகரிப்பாளரிடமிருந்து அந்தப் பிரதிகளை வாங்கியிருந்தது அந்நிறுவனம்.

ஐன்ஸ்டீன் எந்தமுறையில் சிந்தித்தார் மற்றும் பணிபுரிந்தார் என்பதை விவரிப்பனவாக உள்ளன அந்தப் பிரதிகள். அப்பிரதிகளில் கணித ஃபார்முலாக்கள் அதிகமாகவும், வாக்கியங்கள் குறைவாகவும் உள்ளன.

ஜெர்மனி நாட்டில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்த ஐன்ஸ்டீன், அந்நாட்டில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததும், நிரந்தரமாக அமெரிக்காவிலேயே குடியேறிவிட்டார். அவர் மீண்டும் தன் தாய்நாட்டிற்கு செல்லவில்லை. 1955ம் ஆண்டு, அமெரிக்காவின் நியூஜெர்ஸியில், தனது 76ம வயதில் காலமானார்.

– மதுரை மாயாண்டி