சென்னை: மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று மாலை பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர்  பாரதிராஜாவின் மகன் மனோஜ்குமார் நேற்று மாலை திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். 48வயதாகும் அவருக்கு ஏற்கனவே இருத அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். . மனோஜ் மறைவு திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து மனோஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமைலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

நடிகர் மனோஜ் மறைவு- இளையராஜா வீடியோ வெளியிட்டு இரங்கல் மேலும், இயக்குனர்கள் தியாகராஜன், பேரரசு, நடிகர்கள் பார்த்திபன், சூர்யா, ரோபோ சங்கர், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலரும் கண்ணீர் மல்க மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மரணம் அடைந்த மனோஜ் உடல் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இன்று மதியம் 3 மணி வரை அவரது வீட்டிலேயே பொதுமக்கள் அஞ்சலிக்காக  வைத்துவிட்டு, மாலை 4:30 மணி அளவில் பெசன்ட் நகர் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.