டில்லி
முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்தியா எப்போதும் முதலில் அணு ஆயுத தாக்குதலை நடத்தாது என கூறி உள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் உலகமே நிலை குலைந்துள்ளது. இதற்கு பொறுப்பேற்றுள்ள பாகிஸ்தானின் தீவரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது அமைப்புக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பிரதமர் மோடி இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் சரியான விலை அளிக்க வேண்டி வரும் என எச்சரித்துள்ளார்.
இந்திய மக்கள் பலர் அணு ஆயுதம் மூலம் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நேற்று முன்னாள் அரசு அதிகாரி ராகேஷ் சூட் எழுதிய “21ஆம் நூற்றாண்டில் அணு நெறிமுறை” என்னும் ஆங்கில புத்தக வெளியிட்டு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துக் கொண்டார்.
அப்போது மன்மோகன்சிங், “இந்தியா ஒரு அணுசக்தி நாடாக இருந்த போதிலும் அதற்கென ஒரு பாரம்பரியத்துடன் நடந்துக் கொள்கிறது. இவ்வகையில் இந்தியா ஒரு தனித்தன்மை வாய்ந்த நாடாக திகழ்கிறது. உலகின் பல நாடுகளில் அணு ஆயுதத்தை ராணுவ தளவாடங்களில் சேர்த்துள்ள போதிலும் இந்தியா அவ்வாறு செய்யவில்லை.
உலகின் பல நாடுகளில் அணு ஆயுத அச்சுறுத்தல் அதிகரித்ததால் தனது அணு ஆயுத சோதனைகளை நிகழ்த்திய இந்தியா தற்போது வல்லமை பொருந்திய நவீன அணு ஆயுதங்களை கை வசம் வைத்துள்ளது. ஆயினும் எந்த ஒரு நாட்டின் மீதும் இந்தியா முதலில் அணு ஆயுத தாக்குதலை தொடங்கக் கூடாது என்னும் கொள்கையுடன் இருந்து வருகிறது.” என தெரிவித்துள்ளார்.