டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்களை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அந்த வழக்குகளை அசாம் மாநில உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் இருஇன மக்களிடையே மோதல் ஏற்பட்டது. கந்த மே மாதம் இதுதொடர்பான வன்முறையின்போது, பழங்குடியினப் பெண்கள் இருவர் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை வைத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கின.
இதற்கிடையில், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் அடையாளம் வெளியிடப்படக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. எற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, “மே 4-ம் தேதி நடந்த இந்தச் சம்பவம், ஒரு தனிப்பட்ட சம்பவம் இல்லை என்பது உள்துறைச் செயலாளர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இருந்து தெரிகிறது. பாதிக்கப்பட்ட இந்த இரண்டு பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் எந்த அளவுக்கு விருப்புகிறதோ அதே அளவுக்கு இதுபோல பாதிக்கப்படும் பிற பெண்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் ஒரு வழிமுறையை (mechanism) உருவாக்க வேண்டும். குற்றம் தொடர்பாக வழக்கு போடுதல், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தலைஉறுதி செய்யும் ஒரு செயல்முறையை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
விசாரணையின்போது பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மணிப்பூர் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும், மே 4 சம்பவத்தை விசாரிக்க சுதந்திரமான ஓர் அமைப்பை உச்ச நீதிமன்றம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல, இந்த வழக்கினை அசாமுக்கு மாற்ற வேண்டும் என்ற அரசின் கோரிக்கைக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பு எதிர்ப்புத் தெரிவித்தது.
இந்த நிலையில், மணிப்பூர் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளின் விசாரணையை அசாம் மாநிலத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்கொள்வதற்கான நீதிபதியை நியமிக்குமாறு, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.