டெல்லி: எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 8வது நாளாக முடங்கி உள்ளது. அவை மதியம் 2மணி வரை ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 8வது நாள் அமர்வு காலை 11மணி அளவில் தொடங்கியதும், மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் 8-வது நாளாக முடங்கியுள்ளது. இன்று காலை கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், இரு அவைகளையும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர். இதற்கிடையே மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் 10 நாள்களில் பட்டியலிடப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.