இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் வன்முறை ஏற்பட்டு உள்ளது.  வன்முறையைத் தொடர்ந்து 3 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் இரு இன மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்து வந்த நிலையில்,  தலைநகர்  இம்பாலில் தனித்தனி சம்பவங்களில் 3 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் பல சுற்று கண்ணீர் புகை குண்டுகளை வீசி அப்பகுதிக்குள் நுழைய விரும்பிய கூட்டத்தை கலைக்க வேண்டியிருந்தது. மேலும், வன்முறையாளர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறை மற்றும் நிர்வாண ஊர்வலம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, வன்முறை கட்டுக்கொண்டு வரப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை – 27ந்தேதி) பிற்பகல் இம்பால் மேற்கு மாவட்டத்தின் நியூ லாம்புலேன் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று கைவிடப்பட்ட வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர்.  இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மைடேய் பெரும்பான்மையான குக்கி ஆதிக்கம் செலுத்தும் சில இடங்களில் நியூ லாம்புலேன் ஒன்றாகும். இந்த பகுதியில் வசித்த மக்கள், கடந்த மே மாதம் தொடங்கிய இனக்கலவரத்தின்போது,  குகி ஆதிக்கம் நிறைந்த மலைப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

 மற்றொரு சம்பவத்தில், இம்பால் மேற்கு மாவட்டத்தின் சாகோல்பந்த் பிஜோய் கோவிந்தா பகுதியில் முன்னாள் மாநில சுகாதார இயக்குநர் கே ராஜோவின் பாதுகாவலர்களிடம் இருந்து அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு ஏகே ரக துப்பாக்கிகள் மற்றும் கார்பைனை பறித்துச் சென்றனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று மூத்த மாவட்ட காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தினார்.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, மற்ற கட்டிடங்களுக்கு தீ பரவுவதற்கு முன்பு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க முடிந்தது என்றும்,  பாதுகாப்புப் படையினர் பல சுற்று கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி அப்பகுதிக்குள் நுழைய விரும்பிய கூட்டத்தை கலைக்க வேண்டியிருந்தது என்று தெரிவித்துள்ளார். இதனால்,அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையில், மணிப்பூர் சட்டப் பேரவை கூட்டத்தொடர்  நாளை (ஆகஸ்ட் 29-ம் தேதி ) கூட உள்ளது. இதில் இந்த விவகாரங்கள் பூதாகரமாக எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.