டெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி வரும் நிலையில், இன்று மதியம் 12மணிக்கு மக்களவையில் விவாதம் நடத்தப்படும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் ஆகஸ்டு 11ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையில், மணிப்பூர் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதால், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய ஜூலை 20ந்தேதி முதல், மணிப்பூர் விவகாரத்தை உடனே விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இரு அவைகளும் முடங்கி உள்ளன.
இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக உள்பட இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் அறிக்கையை இரு அவைகளிலும் வெளியிடக் கோரி போராட்டம் நடத்தின.
இந்த நிலையில், இன்று காலை 11மணி அளவில் மீண்டும் அவை கூடியதும், எதிர்க்கட்சிகள் கோஷமிட்டு, மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி பதாதைகளுடன் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணியா இந்தியா டிமாண்ட் மணிப்பூர் என்ற பதாதைகளுடனும், பிரதமர் பதில் கூற வேண்டும் என வலியுறுத்தப்படும் பதாதைகளுடன் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவையில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார். ஆனால் எம்.பி.க்கள் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் அறிக்கையை எதிர்பார்க்கிறோம் என கூறி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை 12மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதுபோல மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினரின் அமளியில் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மக்களவை மதியம் 12மணி வரை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் 12 மணிக்கு விவாதம் நடத்தப்படும் என, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.