டெல்லி: கோவா மற்றும் தெலுங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்து உள்ளாளர்.
2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல்காந்தி குமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு, மக்களிடையே ஆதரவை திரட்டி வருகிறார். தொடர்ந்து, மேலும் பல நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளன.
இந்த நிலையில், தெலுங்கானா, கோவா மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்களை அகில இந்தியகாங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமனம் செய்துள்ளார். அதன்படி, தெலுங்கானா மாநில பொறுப்பாளராக மாணிக்ராவ் தாக்கரே நியமிக்கப்பட்டுள்ளார்.
அதுபோல கோவா மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவர்கள் உடடினயாக பொறுப்புக்கு வருகிறார்கள்.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பாளராக உள்ள தினேஷ் குண்டுராவ் அதே பொறுப்பில் நீடிக்கிறார்.
ஏற்கனவே மாணிக்கம்தாகூர் தெலுங்கானா மாநில பொறுப்பாளராக இருந்த நிலையில், அதில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். அதுபோல கோவா மாநில பொறுப்பை கவனித்து வந்த தினேஷ் குண்டுராவும் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.