தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் நீக்கப்படுவதாக ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையின் படி, அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் விடுவிக்கப்பட்டார். அவர் வகித்த பொறுப்பு கூடுதலாக ருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக உள்ள ஆர்.பி உதயகுமாருக்கு ஒதுக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் பொறுப்புகளை கூடுதலாக இனி ஆர்.பி உதயகுமார் கவனித்துக் கொள்வார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் இருந்து, விடுவிக்கப்படும் முதல் நபர் மணிகண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு கேபிள் டிவி நிர்வாகம் தொடர்பாகவும், அதற்காக நியமிக்கப்பட்ட உடுமலை இராதாகிருஷ்ணன் தொடர்பாகவும் சமீபத்தில் பேசியிருந்த மணிகண்டன், அக்ஷயா கேபிள் என்று உடுமலை இராதாகிருஷ்ணன் நடத்தி வரும் தனியார் கேபிள் விஷன் தொடர்பாக கடுமையாக விமர்சனம் வைத்ததே இந்த மாற்றத்திற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.