டெல்லி: பாமக யாருடையது என்பது குறித்து விசாரிக்க சிவில் நீதிமன்றத்தை நாட டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. விசாரணையின்போது, மாம்பழம் சின்னம் முடக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மினி புஷ்கர்னா முன்பு விசாரணை நடைபெற்றது. அன்புமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவர் ராமதாஸ் தரப்பு வாதங்களை பாமக என்று கூறவே முடியாது; மனுவை தள்ளுபடி செய்யுங்கள் என வலியுறுத்தினார்.
ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர், போலி ஆவணம் கொடுத்து கட்சித் தலைவர் ஆனவர் அன்புமணி, அதனால், இந்த; மனு விசாரணைக்கு உகந்ததே என வலியுறுத்தினார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராமதாஸ் தரப்பு, கட்சிக்கு உரிமை கோருகிறது என்றால் குறைந்தபட்சம் அவர்கள் ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும்; குறிப்பாக நீதிமன்ற உத்தரவை பெற்று அவர்கள் இந்த விவகாரத்தை அணுக வேண்டும் என்று கூறியதுடன், தற்போது இந்த இரு தரப்பும் பிரச்சனைக்கு உரியதாக இருந்தால் படிவம் A மற்றும் படிவம் B ஆகியவற்றில் இரு தரப்பு கையெழுத்து போடுவதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளாது; பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என கூறியது.
பாமக விவகாரத்தை பொருத்தவரை அந்த கட்சி அங்கீகரிக்க படாத கட்சி. எனவே தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது இது தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை தான் கட்சித் தரப்பினர் நாட முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
வாதங்களை கேட்ட நீதிபதி பாமகவை அன்புமணி அபகரித்ததாக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டார்.
முன்னதாக, பாமக நிறுவனரான ராமதாஸூக்கும், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் கட்சியினர் இருபிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர்.
அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் பாமகவுக்கு சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், ராமதாஸ் தனது மகள் காந்திமதியை செயல் தலைவராக நியமித்தார்.
இந்நிலையில் பாமகவின் தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ள தேர்தல் ஆணையம் வரும் 2026 ஆகஸ்டு வரை பாமக வின் தலைவராக அன்புமணியே தொடருவார் என்றும், மாம்பழ சின்னத்துடன், பாமக சார்பில் தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் அவருக்குத்தான் உள்ளது எனவும் அறிவித்தது.
இதில் கோபமடைந்த ராமதாஸ், பாமகவின் தலைவராக பதவி வகித்த அன்புமணியின் பதவிக்காலம் ஏற்கெனவே முடிவடைந்து விட்டது என்றும், தாங்கள் தான் உண்மையான பாமக என்றும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார்.
ஆனால் ராமதாஸ் விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. அதையடுத்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது