சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் நாளை முதல் கடும் காற்று மற்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்,  பொதுமக்களுக்கு உதவ போலீசார் தயாராக இருக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட சில பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக மழை இல்லை. ஆனாலும் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் உருவாக்கி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என எச்சரித்துள்ள வானிலை மையம், அந்த புயலுக்கு மாண்டஸ் என  பெயரிட்டுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகி உள்ள முதல் புயல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இநத் புயல் தற்போது சென்னையில் இருந்து 770 கி.மீ. கிழக்கு தென் கிழக்கு திசையில் நிலைக்கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை நெருங்கி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலையில் புயலாக மாறும் என்றும், நாளை காலை வடதமிழகம் – புதுச்சேரி ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடலை அடையும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. இந்த புயல் எச்சரிக்கை காரணமாக தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு படையினர் பல மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

இநத் நிலையில்,  புயல் மழையால் பாதிக்கப்படுவோருக்கு உதவ போலீசார் தயார் நிலையில் இருக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.  கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த 50 நீச்சல் வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும், அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.