சென்னை: மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை மெரினா உள்பட பல பகுதிகளில் கடல்சீற்றம் அதிகமாக உள்ளது. 6அடி உயரத்துக்கு அலை எழுந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால், கடலுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டூள்ளது. காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுபோல குமரியில் கடல் உள்வாங்கியது.
வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். புயல் எச்சரிக்கையை தொடர்ந்து எண்ணூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடலுக்குள் சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கடல் சீற்றமாக காணப்படுகிறது. சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உள்பட அனைத்து இடங்களிலும் கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. பல அடி உயரத்துக்கு கடுமையான சீற்றத்துடன் கடல் காணப்பட்டது. மேலும், மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளிலும் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
இதை தொடர்ந்து மெரினா, பெசன்ட் நகர் உள்பட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. புயல் மற்றும் கடல் சீற்றம் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்ல மக்கள் அனுமதிக்கப்படவில்லை. மீறி செல்வோரை, போலீசார் வெளியேறுமாறு எச்சரித்துரு வருகின்றனர்.