சென்னை: தமிழகத்தை சார்ந்த யாத்ரீகள் மானசரோவர், முக்திநாத் யாத்திரைகளுக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதற்கான விண்ணப்பம் அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
2021-2022 ஆம் நிதியாண்டில் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு யாத்திரையை முழுமையாக நிறைவு செய்த, தமிழ்நாட்டை சேர்ந்த யாத்ரீகள் மானியம் பெற விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2021-2022 ஆம் நிதியாண்டில் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு யாத்திரையை முழுமையாக நிறைவு செய்த தமிழ்நாட்டை சேர்ந்த இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மானியம் வழங்கும் திட்டத்தின்படி,பின்வரும் நிபந்தனைகள் நெறிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொண்டு யாத்திரையை நிறைவு செய்த யாத்ரீகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதன்படி,01.04.2021 முதல் 31.03.2022 முடியவுள்ள காலத்தில் மானசரோவர், முக்திநாத் புனித யாத்திரை மேற்கொண்டு முழுமையாக நிறைவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் இத்துறை இணையதளமான https://hrce.tn.gov.in//hrcehome/index.php-ல் பதிவேற்றப்பட்டுள்ள உறுதிமொழியுடன் கூடிய விண்ணப்ப படிவங்களை மட்டுமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். அதன்படி விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் எழுத்தால் முழுமையாக பூர்த்தி செய்து “இந்து” மதத்தை சார்ந்தவர் என்பதற்கான சான்று உள்ளிட்ட படிவத்தில் குறியிடப்பட்டுள்ள அனைத்து சான்று களையும் வரிசைப்படி இணைத்து பக்க எண்ணிட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன் “ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, எண்.119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை -34″ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
30.04.2022 ஆம் தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதி வாய்ந்த பயனாளிகள் அரசால் அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுவர்.தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானதாகும்.
ஒவ்வொரு யாத்திரைக்கும் தகுதி வாய்ந்த பயனாளிகள் 500க்கு மேல் இருப்பின் பயனாளிகளின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் குறைந்த வருமானம் கொண்டவர்களிடமிருந்து ஏறுமுகத்தில் (Ascending order) துவங்கி முதல் 500 பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தேவையான விவரங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளம் https://hrce.tn.gov.in//hrcehome/index.php மூலம் தெரிந்து கொள்ளலாம்”.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.