விசாகப்பட்டினம் முதல் செகந்திராபாத் வரை புதிதாக துவங்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் செல்பி எடுக்க ஏறியவர் தானியங்கி கதவு மூடியதால் ரயில் பெட்டியில் சிக்கி 150 கி.மீ. பயணம் செய்தார்.

சதாப்தி, ராஜதானி, ஃகட்டிமான், தேஜஸ், டூரான்டோ ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் வரிசையில் வந்தே பாரத் அதிவேக ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இது மற்ற ரயில்களை விட வேகமாக செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது என்பதால் புதிதாக துவக்கப்படும் அனைத்து வழித்தடத்திலும் வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைப்பதை நடைமுறையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் ஜனவரி 15 ம் தேதி செகந்திராபாத் முதல் விசாகப்பட்டினம் வரையிலான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கொடியசைத்து துவக்கி வைத்தார்

செகந்திராபாத்தில் இருந்து வாரங்கல், கம்மம், விஜயவாடா, ராஜமுந்திரி வழியாக விசாகப்பட்டினம் செல்லும் இந்த ரயிலைக் காண கடந்த இரண்டு நாட்களாக இந்த ரயில் நிலையங்களில் ஏராளமான பொதுமக்கள் கூடி வருகின்றனர்.

நேற்று அதிகாலை இந்த ரயில் விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் சென்ற போது ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் ரயிலுக்குள் ஏறி செல்பி எடுக்க முயன்ற நபர் ரயிலில் இருந்து இறங்குவதற்கு முன் அதன் தானியங்கி கதவு மூடிக்கொண்டதால் அந்த பெட்டியில் சிக்கிக் கொண்டார்.

அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகரிடம் தான் ரயிலில் சிக்கிக் கொண்ட விவரத்தைக் கூற, வேறு வழியில்லாமல் விஜயவாடா வரை ரயிலில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.