தார்பங்கா, பீகார்

முதல் அலை  ஊரடங்கில் புலம் பெயர் தொழிலாளியான தன் தந்தையைச் சைக்கிளில் 1200 கிமீ பயணம் செய்த பெண்ணின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

பீகார் மாநிலம் தார்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் பாஸ்வான் அரியானா மாநிலத்தில் இருந்த குருகிராமில் பணி புரிந்து வந்தார். சென்ற வருடம் முதல் அலை கொரோனா பரவலின் போது திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  இதனால் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊருக்குப் பயணம் செய்தனர்.

இவ்வாறு பல்லாயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்த தொழிலாளர்களில் சிலர் வழியிலேயே மரணம் அடைந்தனர்.  குருகிராமில் இருந்த மோகன் பாஸ்வானை அவர் மகள் ஜோதிகுமாரி சைக்கிளில் பின்னால் ஏற்றி 1200 கிமீ தூரம் அழைத்துச் சென்றார்.   15 வயதே ஆன சிறுமி ஜோதிகுமாரியின் இந்த சாதனை அப்போது பலராலும் புகழப்பட்டது.

கடும் வறுமை காரணமாக மனைவியையும் 4 குழந்தைகளையும் கிராமத்தில் விட்டு விட்டு மோகன் பாஸ்வான் தனது மகளுடன் குருகிராமில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார்.  தற்போது மீண்டும் கிராமத்தில் பணி இல்லாமல் இருந்த மோகன் பாஸ்வானுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.   நாடெங்கும் அவருக்கு மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.