130 கி.மீ. சைக்கிள் பயணம்.. மனைவியைச் சுமந்த ஏழைக்கணவன்


மனுசனோட கண்டுபிடிப்புகளா இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும் சரி…  அது அவனுடைய அப்போதைய அவசரமான தேவையின் அடிப்படையில் தான் பெரும்பாலும் நிகழுது.

இதோ இங்கே, கும்பகோணத்தை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான திரு. அறிவழகன் அவர்களின் மனைவியின் மருத்துவச் சிகிச்சையின் அவசர தேவை அவரை 130 கி.மீ. தூரத்தை வெறும் சைக்கிளிலேயே அடைய வெச்சிருக்கு.

இவரோட மனைவி 60 வயதான மஞ்சுளா வாய் வழி புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்.

பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை தொடர் பெற்றுவரும் அவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை கீமோதெராபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  இவரின் அடுத்த கீமோதெராபி சிகிச்சை மார்ச் 31-ம் தேதி அன்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில்  இந்த கொரோனா தொற்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்து வசதிகள் ரத்து செய்யப்பட்டன.

ஆனால் எப்படியும் மனைவியைச் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றே தீர வேண்டும் என்கிற தீவிர எண்ணம் மட்டுமே கொண்டிருந்த அறிவழகன் என்ன செய்வதென்று யோசித்த போது, அவருக்கு இருந்தது இரண்டே வழிகள் தான்.  ஒன்று அருகிலேயே ஏதாவது தனியார் மருத்துவமனை செல்வது. இரண்டாவது வாடகை கார் மூலம் செல்வது.  சாதாரண விவசாய கூலியான இவருக்கு இவை இரண்டுமே முடியாத விசயம் தான்.  சற்றும் யோசிக்காமல், உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு மனைவியைத் தனது சைக்கிளிலேயே பாண்டிச்சேரிக்கு அழைத்துச்செல்வது என்று முடிவெடுத்தார் இவர்.

மார்ச் 30-ம் தேதி மனைவியைச் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பயணத்தைத் துவக்கிய இவர், மாயவரம், சீர்காழி, சிதம்பரம் மற்றும் கடலூர் வழியாகச் சரியான நேரத்திற்கு ஜிப்மர் மருத்துவமனையை அடைந்துள்ளார்.  இடையில் காவல் துறையினர் சோதனைக்காக நிறுத்திய இடங்களிலெல்லாம் தனது மனைவியின் மருத்துவ அறிக்கை மற்றும் கீமோதெராபி சிகிச்சை செட்யூல் இவற்றைக் காட்டி கடந்து வந்துள்ளார்.  காவல் துறையினரும் இவரின் துணிச்சலைப் பாராட்டியதுடன் உணவு போன்றவற்றை வழங்கி வாழ்த்தி அனுப்பி வைத்துள்ளனர்.  இவ்வளவு தூரப் பயணத்தில் காலை உணவுக்காக மார்ச் 31 அன்று குறிஞ்சிப்பாடியில் மட்டுமே நிறுத்தியுள்ளார்.  தொடர்ந்து சைக்கிளை ஓட்டிச்சென்று சரியான நேரத்தில் மருத்துவமனையை அடைந்துள்ளார் இவர்.

இத்தனை சிரமங்களையும் கடந்து மனைவியுடன் மருத்துவமனையை அடைந்தவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.  அது இந்த கொரோனா ஊரடங்கினால் வெளி நோயாளிகள் பிரிவு மூடப்பட்டுள்ளது என்பது தான்.  எனினும் இவரின் இந்த தீவிரமான விடா முயற்சியினை கண்டு ஆச்சர்யமடைந்து நெகிழ்ந்த மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் இவர் மனைவியினை உடனடியாக அட்மிட் செய்து தகுந்த சிகிச்சையினை திட்டமிட்டபடி அளித்துள்ளனர்.

“இவர் ஓரல் கேன்சரால் (buccal chronoma) பாதிக்கப்பட்டவர்.  நல்லவேளையாக நோய் அதிகமாகப் பரவவில்லை.  ஏற்கெனவே இரண்டு தெராபிகளை முடித்த இவரை இந்த மூன்றாவது தெராபிக்கு சரியான நேரத்தில் அழைத்து வந்த அறிவழகனைப் பாராட்டியே தீர வேண்டும்.  சிகிச்சை முடிந்த உடனடியே இவர்களைத் திருப்பி அனுப்பாமல் உணவு மற்றும் வேண்டிய உதவிகளைச் செய்து அவர்களை அன்றிரவு இங்கேயே தங்க வைத்து மறுநாள் ஆம்புலன்ஸ் ஒன்றினை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தோம்” என்கிறார் ஜிப்மர் மருத்துவமனை மெடிக்கல் சூப்பிரன்டென்ட் A.S. பதே.

அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜ்குமார், “கடினமான தருணங்களில் எத்தனையோ பேர் நமக்கு நம்பிக்கை தரும் வகையில் நடப்பதை நான் பார்த்திருக்கிறேன்.  ஆனால் இவர் ஒரு சாதாரண மனிதர்.  உடலளவில் அவ்வளவு திடகாத்திரமானவர் கிடையாது.  ஆனால் மனைவிக்குத் தகுந்த நேரத்தில் சிகிச்சை கிடைக்க வேண்டுமென்கிற ஒரே வைராக்கியம் மட்டுமே இவரைத் தனது மனைவியையும் ஏற்றிக்கொண்டு வெறும் சைக்கிளிலேயே இத்தனை தூரம் பயணிக்கும் தெம்பினை அளித்துள்ளது.  ஆச்சரியமான மனிதர் தான் இவர்..” என்று சிலாகிக்கிறார்.

குடும்பங்களில் பெண்களின் மீதான வன்முறை என்பது அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே.  படித்தவர்களே பெண்களுக்கான சரியான உரிமைகளை வழங்க மறுக்கும் இக்கால கட்டத்தில் மனைவியை இந்தளவு உயிராக நேசிக்கும் அறிவழகன் நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியவர் தான்