மும்பை

தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி தன்னை பிடிக்க வந்துள்ள போலிசாரிடம் இருந்து தப்பிக்க வாஷிங் மெசினுக்குள் ஒளிந்துக் கொண்டு இருந்துள்ளார்.

புனேவில்.  கடந்த 2002 ஆம் வருடம் அவர் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக மனோஜ் திவாரி என்பவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது,    இது தவிர மேலும் பல மோசடி குற்றச்சாட்டுகளும் பதியப் பட்டுள்ளன.   காவல்துறையினர் அவரைக் கைது செய்ய வரும் போது அவர் தப்பித்துச் சென்றுவிட்டார்.  கடந்த 14 வருடங்களாக காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

மனோஜ் திவாரி

மனோஜ் திவாரி அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றியபடி இருந்ததால் அவரை காவல்துறையினரால் பிடிக்க முடியவில்லை.   இந்நிலையில் அவர் மும்பையில் ஜூகு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் உள்ளதாக சமீபத்தில் தகவல் கிடைத்துள்ளது.   அவரைப் பிடிக்க ஜுகு மற்றும் ஆஜாத் மைதான காவல் நிலையத்தில் இருந்து ஒரு காவல் படை அவர் தங்கி உள்ள இடத்துக்கு சென்றுள்ளனர்.   ஆனால்   தன்னை வழக்கறிஞர் என கூறிக் கொண்ட திவாரியின் மனைவி காவல்துறையினரை தடுத்துள்ளார்.  சுமார் மூன்று மணி நேர வாக்குவாதத்துக்குப் பின் அவர்களை அவர் தங்கள் வீட்டுக்குள் அனுமதித்துள்ளார்.

மூன்று அறைகளைக் கொண்ட அந்த குடியிருப்பில் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.    அப்போது காவலர் ஒருவர் தற்செயலாக அங்கிருந்த வாஷிங் மெஷினை திறந்துள்ளார்.   அதனுள் துணிகளுக்கிடையில் மனோஜ் திவாரி ஒளிந்துக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.     காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.   அத்துடன் அரசு அதிகாரிகள் பணி புரிய விடாமல் இடையூறு செய்ததாக அவர் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.