அகமதாபாத்:

அகமதாபாத்தை சேர்ந்த ரீமா தோஷி என்ற 23 வயது பெண் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சோலா பகத் பகுதியில் சிறிய கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த கரன் சந்தேலா என்பவரை காதலித்தார். இதில் ரீமா ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர். வெங்காயம், பூண்டு, கத்திரிக்காய் போன்றவற்றை சாப்பிடாதவர்.

இப்படி சைவ உணவு முறையிலேயே கட்டுப்பாடு கொண்ட அவர் பீகாரை சேர்ந்த இறைச்சி சாப்பிடும் கரனை காதலித்தார். குறைந்த சம்பளம், இறைச்சி சாப்பிடும் பிரிவை சேர்ந்தவர் போன்ற காரணங்களால் ரீமா பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் ரிமா பெற்றோருடன் கடுமையாக போராடி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திக் கொள்வதாக கரன் காதல் மோகதத்தில் உறுதி அளித்தார்.

இருவரும் திருமணத்திற்கு பின் ரீமா வீட்டிலேயே வசித்து வந்தனர். இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. காலப்போக்கில் குடும்பம் நடத்த போதுமான பணம் தராததால் கணவரை பிரிந்து விடுமாறு ரிமாவிடம் பெற்றோர் கூறினர். இதில் உடன்படாத அவர் கணவருடன் வாடகை வீட்டில் குடியேறினார். அங்கும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுடன் ரீமா பெற்றோர் வீட்டிற்கு திரும்பினார்.

கணவர் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. பணம் கொடுக்காதது, மிரட்டியது ஒரு புறம் இருந்தாலும், கணவர் நண்பர்களுடன் வெளியில் செல்லும் போது மது குடிக்கிறார். இறைச்சி சாப்பிடுகிறார். இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் என்று கூறியதால் தான் திருமணம் செய்து கொண்டேன் என்று ரீமா போலீசில் தெரிவித்தனர்.

ஆனால், நான் இறைச்சி சாப்பிடுவது கிடையாது. ரீமா முன்பு இறைச்சி சாப்பிடுவது கிடையாது. அதோடு இறைச்சி உணவு பரிமாறும் இடங்களுக்கு நான் அவரை அழைத்துச் செல்வது கிடையாது என்று கரணும் போலீசில் தெரிவித்தார்.

எனினும் இருவரையும் போலீசார் சமரசம் செய்து வைக்க போலீசார் முயற்சித்தனர். ஆனால் இறைச்சி சாப்பிடுவதால் அவருடன் சேர்ந்து வாழமாட்டேன் என்று ரீமா தெரிவித்துவிட்டார். இதனால் இருவரது சம்மதத்துடன் விவாகரத்து பெறும்படி போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.