கேரளாவின் வயநாடு பகுதியில் கடந்த 3 நாட்களாக தேடப்பட்டு வந்த மனிதனை உண்ணும் புலி காட்டில் இறந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வயநாட்டில் உள்ள மானந்தவாடி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காபி தோட்டத்தில் வேலை செய்து வந்த ராதா என்ற பெண்ணை கடித்துக் கொன்றது.

இதனைத் தொடர்ந்து பிலக்காவு, பஞ்சரகொல்லி மற்றும் தாரத் உள்ளிட்ட பகுதிகளில் விரைவுப் பணிக்குழு (RRT) புலியை தேடும் பணியை தீவிரப்படுத்திய நிலையில் ஞாயிற்றுக்கிழமை, ஆர்.ஆர்.டி ஊழியர் ஜெயசூர்யா என்பவரைத் தாக்கியது.

இந்த தாக்குதலில் காயமடைந்த ஜெயசூர்யா உயிர்பிழைத்ததை அடுத்து, அந்த புலியை ‘மனிதனை உண்ணும்’ புலி என்று கேரள அரசு அறிவித்ததோடு காட்டுப்பகுதிக்குள் செல்ல தடையும் விதித்தது.

இந்த நிலையில் இன்று காலை பிலாக்காவில் ஒரு புலி இறந்து கிடந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது தேடப்பட்டு வந்த மனிதனை உண்ணும் புலி என்று நம்பப்படுகிறது, RRTயைச் சேர்ந்தவர்கள் நேற்றிரவு இந்த புலியை பார்த்ததாகவும் அது கழுத்தில் அடிபட்டு சோர்வாக காணப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், அது வேட்டையாட முடியாத அளவுக்கு சோர்வாக இருந்ததை அடுத்து காட்டில் கிடந்த கோழி கழிவுகளை தின்றதை பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

இரவு நேரம் என்பதாலும் சார்வாக காணப்பட்ட புலி அதிக தூரம் செல்ல வாய்ப்பு இல்லை என்பதாலும் இன்று காலை அதை சுட்டுப்பிடிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்த நிலையில் அந்த புலி கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர்.