சூரத்: பல அரசியல்வாதிகளின் குரல்களில் மிமிக்ரி செய்து ரயிலில் வியாபாரம் மேற்கொண்ட குஜராத் மாநில வியாபாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டு, 10 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஆப்தேஷ் துபே என்ற நபர், ரயில்களில் பொம்மை விற்பவர். இவர் தனது பொம்மை விற்பனையை அதிகரிப்பதற்காக, பல அரசியல்வாதிகளின் குரல்களில் மிமிக்ரி செய்து வந்திருக்கிறார். அதை சிலர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் போட, அது வைரலாகிவிட்டது.

இதையடுத்து, சூரத் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட அவரின் மீது ரயில்வே சட்டத்தின்படி 144ஏ, 145பி மற்றும் 147 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தன் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவரை 10 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அவர் ரூ.3500 அபராதம் கட்ட வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.