கொல்கத்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாம் பொது சிவில் சட்டத்தை ஏற்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடுகிறது. இங்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன.

நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கொல்கத்தாவில் சிவப்பு சாலையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

அந்தக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி,

“நாம் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டோம். மேலும் இந்த சட்டங்களை மேற்கு வங்காளத்தில் வலுக்கட்டாயமாக அமல்படுத்த அனுமதிக்க மாட்டேன். 

எனக்கு மக்களை எப்படி வெறுக்க வேண்டும் என்று தெரியாது. வெறுப்பு பேச்சுகளை நான் பேசுவது இல்லை. மக்கள் எல்லோரும் சகோதரர்கள் போல் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். மக்கள் அமைதியாகவும், இணக்கமாகவும் வாழ வேண்டும். 

பா.ஜனதாவுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராடுவது திரிணாமுல் காங்கிரஸ் மட்டும்தான். பிறகு ‘இந்தியா’ கூட்டணி பற்றி முடிவு செய்யலாம். ஆனால் மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, ஒரு ஓட்டு கூட வேறு கட்சிக்குச் செல்லக்கூடாது .

மத்திய விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர்களைத் தேர்தல் நேரத்தில் மிரட்டி வருகிறார்கள். ஒரு சிறையைக் கட்டி, அனைவரையும் அதில் தள்ளினால் 130 கோடி மக்களையும் சிறையில் அடைக்க முடியுமா? 

நான் நாட்டுக்காக ரத்தம் சிந்தவும் தயாராக இருக்கிறேன். அதே நேரத்தில் இந்தச் சித்ரவதை தொடர அனுமதிக்க மாட்டேன்” 

என்று உரையாற்றினார்.