கொல்கத்தா

விஸ்வ ஹிந்து பரிஷத் விஜய தசமி அன்று சாஸ்திர பூஜா நடத்தக் கூடாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எச்சரித்துள்ளார்.

வங்காள மாநிலத்தில் நவராத்திரி பண்டிகை துர்கா பூஜா என்னும் பெயரில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.   விஜயதசமியுடன் நிறைவு பெறும் இந்த விழாவில் அடுத்த நாள் துர்க்கை அம்மனின் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

இந்த வருடம் செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று விஜயதசமியும்,  அக்டோபர் 1 அன்று முகரமும் வருகின்றன.   முகரம் என்பது இஸ்லாமியர்களின் துக்க நாள் என்பதால் அன்று ஊர்வலம் ஆர்ப்பாட்டம் ஆகியவை கூடாது என மேற்கு வங்க அரசு அறிவித்திருந்தது.   அதன் படி முதல்வர் மம்தா பானர்ஜி செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல், அக்டோபர் 1 முழுவதும் எந்த இந்து மத நிகழ்வும் நடத்தக் கூடாது என தெரிவித்திருந்தார்.    பின்பு அரசின் சட்ட அமைச்சகம் செப்டம்பர் 30ஆம் தேதி இரவு 10 மணி வரையில் சிலைகள் கரைக்க அனுமதி உண்டு என தெரிவித்தது.

இந்நிலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மேற்கு வங்கத்தில் 300 இடங்களில் விஜயதசமி பூஜை நடத்தப் போவதாகவும்,  இந்துக்கள் வழக்கப்படி அடுத்த நாள் அதாவது அக்டோபர் 1 அன்று சாஸ்திர பூஜை என்னும் சிலை கரைப்பும் நடைபெறும் என அறிவித்தது.   இது மம்தா பானர்ஜிக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.

மம்தா பானர்ஜி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஸ்வ இந்து பரிஷத்க்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன்.  நெருப்புடன் விளையாட வேண்டாம்.  முகரம் பண்டிகையான அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று சிலைகளை கரைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.  அரசின் உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  செப்டம்பர் 30 மாலை ஆறு மணியிலிருந்து அக்டோபர் 2 காலை வரை எந்த ஒரு விழாவும் கூடாது.   இது எனது கடுமையான எச்சரிக்கை” என தெரிவித்துள்ளார்.