கொல்கத்தா:

நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், சுவாமி விவேகானந்தர் ஆகியோர் பிறந்தநாளை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று நேதாஜியின் 121வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கொல்கத்தாவில் அவரது மரியாதை செலுத்திய மம்தா கூறுகையில், ‘‘நேதாஜியின் பிறந்தநாளை தேசிய விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்காமல் உள்ளது. இந்த மரியாதையை கூட அவருக்கு நாம் செலுத்த கூடாதா?. ஜனவரி 23ம் தேதியை விடுமுறை தினமாக மாநில அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.

ஆளுங்கட்சியினரால் இது கூட செய்ய முடியவில்லை என்றால் அவர்களிடம் இருந்து வேறு என்ன தான் எதிர்பார்ப்பது?. நேதாஜிக்கு என்ன நடந்தது என்பது கூட இன்னும் சரியாக தெரியாத நிலை உள்ளது. ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே நம்பும் வரலாறு தான் உள்ளது. மேலும், நேதாஜி கொண்டு வந்த திட்ட ஆணையத்தை மோடி அரசு கலைத்துவிட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.