கொல்கத்தா : நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருட்கள் விலை உயர்வு குறித்து, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என மத்திய அரசை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். டீசல் விலை ரூ.100ஐ தாண்டிச் சென்றுள்ளதால், வாகன வாடகை உயர்வு உள்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பெட்ரோல் விலை உயர்வுக்காக பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டித்துள்ளதுடன், பாஜக அல்லாத மாநிலங்களில் நடத்தப்படும் அட்டூழியங் களில் இருந்து கவனத்தை திசை திருப்பவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு அனுமதித்தது என்றும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
“எரிபொருள் விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இந்த நெருக்கடிக்கு பாஜக தான் காரணம்; இது உத்தரபிரதேச தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நாட்டிற்கு அவர்கள் கொடுக்கும் பரிசு” என்று சாடியவர், “எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ மற்றும் இடி போன்ற அமைப்புகளைப் பயன்படுத்து வதற்குப் பதிலாக, தற்போதைய பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்க மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” என்று முதல்வர் மேலும் கூறினார்.