கொல்கத்தா:
மத்திய அரசு திட்டங்களின் பெயர்களை மாற்றி புதிய பெயர்களில் அத்திட்டத்தை செயல்படுத்துவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது பாஜ குற்றம்சாட்டியுள்ளது. இதனால் அவரை பாபரோடு ஒப்பிட்டு பாஜ கருத்து தெரிவித்துள்ளது.
மத்திய பாஜ அரசை தொடர்ந்து விமர்சனம் செய்யும் கட்சியாக திரிணமுல் காங்கிரஸ் கட்சி உள்ளது. கடந்த நவம்பரில் பணமதிப்பிழப்பு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதற்கு அ க்கட்சி கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. இந்நிலையில் ‘‘பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா’ என்ற திட்டத்தை ‘‘பங்களர் கிராமின் சதாக் யோஜனா’’ என்று மாற்றி மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
‘‘பிரதான் மந்திரி’’ என்ற வார்த்தை அகற்றுவதே மம்தாவின் திட்டமாக உள்ளது. அதேபோல் ‘‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா கிராமின் திட்டம் பங்களர் கிரிஹா பிரகால்பா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு பாஜ தலைவர் சந்திர குமார் போஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜியை பாபருடன் அவர் ஒப்பிட்டு பேசியுள்ளார். ‘‘அயோத்தியில் கோவிலை இடித்துவிட்டு பாபர் மசூதியை கட்டியவரை போன்றவர் மம்தா’’ என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த மாநில அரசு 10 சதவீத பங்களிப்பு அளிக்கும் திட்டம் அமலில் உள்ளது. தற்போது இந்த பங்களிப்பு தொகையை 40 சதவீதமாக பாஜ அரசு உயர்த்தியுள்ளது.
அதனால் திட்டத்தின் முழு பயனையும் ஏன் மத்திய அரசு அனுபவிக்க வேண்டும். நிதி பங்களிப்போடு செயல்படுத்தும் அரசு எந்திரம், முகமைகள் மூலம் மாநில அரசு தான் திட்டத்தை செயல்படுத்துகிறது. இதனால் பெயரை மாற்றுவதில் தவறில்லை என்று ஆளுங்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கூச் பெகார் மாவட்ட கலெக்டர் உலகநாதன் இதை உறுதிபடுத்தியுள்ளார். பெயர் மாற்றுவது தொடர்பான உத்தரவு மாநில அரசிடம் இருந்து வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், சிலர் கூறுகையில், ‘‘ திட்டங்களின் பெயர்கள் அறிவிப்பு பலகைகளில் மாற்றப்ப்டடுள்ளது. இத்தகைய திட்டங்களுக்கு மாநில அரசும் தான் நிதி வழங்குகிறது. அதனால் மத்திய அரசின் முத்திரை மட்டும் இதில் இடம்பெறுவது சரியல்ல’’ என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மம்தாவின் இந்த நடவடிக்கை குறித்து சிபிஐ தலைவர் ப்வாத் ஹலிம் கூறுகையில், ‘‘புதிய குடுவையில் பழைய ஓயினை நிரப்பும் செயல். அனைத்து மத்திய அரசு திட்டங்களும் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் நடுத்தர மக்களின் நிலைமை மாறவில்லை’’ என்றார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ஓம்பிரகாஷ் மிஸ்ரா கூறுகையில்,‘‘ மத்திய அரசும், மேற்கு வங்க அரசும் ஏற்கனவே அமல்படுத்திய திட்டங்களின் பெயர்களை மாற்றும் கொள்கையை கொண்டுள்ளன. இந்த நடைமுறை ஏற்க தகுந்ததல்ல’’ என்றார்.