கொல்கத்தா:

கொல்கத்தாவில் காவல்துறை ஆணையரை விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் குறித்து  உச்சநீதி மன்றத்தை நாடப்போவதாக சிபிஐ  இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் கூறி உள்ளார்.

சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ்

மேற்கு வங்க மாநிலத்தில், காவல்துறை ஆணையர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சிபிஐ அதிகாரிகளை, மாநில காவல்துறையினர், தடுத்து நிறுத்தி வெளியேற்றிய நிலையில், மாநில அரசை கலைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் காவலரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

‘அரசியலமைப்பை பாதுகாப்போம்’ என்ற பெயரில் நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த, சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ்,  காவல் ஆணையருக்கு எதிராக, தங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருந்த காரணத்தினாலேயே, அவரை விசாரிக்க, சிபிஐ அதிகாரிகள் சென்றனர் என்று கூறினார்.

கொல்கத்தாவில் நடைபெற்று வரும்  சம்பவம் தொடர்பாக, மூத்த சட்ட நிபுணர்க ளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், அதன்படி, இன்று, உச்சநீதிமன்றத்தை நாட இருப்பதாகவும், நாகேஸ்வரராவ் தெரிவித்து உள்ளார்.

தற்போது,   கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதால், அங்கு மத்திய பாதுகாப்பு படை (CRPF) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறினார்.

கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக,   சிபிஐ அதிகாரிகள் ஆளுநரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால்,  ஆளுநர் மாளிகை இதுகுறித்து உறுதியான தகவல்களை தெரிவிக்கவில்லை.

சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தம், மம்தாவின் தர்ணா ஆகியவை குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு, ஆளுநர் விளக்கம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மம்தாவின் அதிரடி நடவடிக்கை, பாஜக அரசுக்கு எதிரான மாநில அரசுகளிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.