கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தில், காவல்துறை ஆணையர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சிபிஐ அதிகாரிகளை, மாநில காவல்துறையினர், தடுத்து நிறுத்தி கைது செய்து, சிறிது நேரத்தில் விடுவித்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள மம்தா, தமது ஆட்சியைக் கலைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி, அரசியலமைப்பை பாதுகாப்போம் என்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடியில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் விசாரணைக்க ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகாததால், சிபிஐ அதிகாரிகள் 5 பேர் திடீரென நேற்று பிற்பகல் காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டிற்கு சென்றனர்.
இதை பார்த்த மாநில காவல்துறையினர், அவர்களை வீட்டுக்குள் செல்ல அனுமதி மறுத்து, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பின்னர் விடுவித்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
அதைத்தொடடர்ந்து, கொல்கத்தா எஸ்பிளனேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே மத்திய அரசுக்கு எதிராக, அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாப்போம் என்ற பெயரில் அவர் தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.
இது பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஏராளமானனோர் உள்பட காவல்துறை அதிகாரி களும் பங்கேற்றனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மம்தா பானர்ஜியின் தர்ணாவைத் தொடர்ந்து, மேற்கு வங்க ஆளுநர் கே.என்.திரிபாதி மூத்த அதிகாரிகளுடன் நள்ளிரவில் ஆலோசனை மேற்கொண்டார்.
கொல்கத்தா காவல் ஆணையரை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்கச் சென்றபின் அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்து மேற்குவங்க தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், போலீஸ் டிஜிபி ஆகியோரை நேரில் வரவழைத்து, ஆளுநர் திரிபாதி ஆலோசனை மேற்கொண்டு, விவரங்களை கேட்டறிந்தார்.
இதற்கிடையில், இன்று மாநில அமைச்சர்கள் கூட்டத்தை மம்தா கூட்டியுள்ளார்.