காரக்பூர்: வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி, மேற்கு வங்கம் குறித்து பேசியது தேர்தல் விதிமீறல் என திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான மமதா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

காரக்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது: 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, எங்களது தேர்தல் பிரச்சாரத்தில் வங்கதேசத்தை சேர்ந்த நடிகர் ஒருவர் கலந்து கொண்டார். இதனையடுத்து வங்கதேச அரசிடம் பேசிய பாஜக அவரின் விசாவை ரத்து செய்ய வைத்தது.

தற்போது, மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்கும் போது, குறிப்பிட்ட மக்களின் ஆதரவை பெறுவதற்காக பிரதமர் வங்கதேசம் சென்றுள்ளார். உங்களின் விசாவை ஏன் ரத்து செய்யக்கூடாது?

தேர்தல் நடக்கும் நேரத்தில் வங்கதேசம் சென்றுள்ள பிரதமர். மேற்கு வங்கம் குறித்து பேசுகிறார். இது, முற்றிலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல். ஓட்டுக்காக பிரதமர் வங்கதேசம் சென்றுள்ளார் என்று பேசினார்.