மாலத்தீவு: மாலத்தீவில் உள்ள பிரபலமான வாகன ரிப்பேயர் கேரேஜில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 9 இந்தியர்கள் உள்பட 10 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தீவிபத்து மற்றும் பாதிக்கப்பட்டோர் குறித்து அறிந்துகொள்ள ஹெல்ப்லைன் எண்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

மாலத்தீவு தலைநகர் மாலேயில் உள்ள அடுக்குமாடி கட்டித்தின் தரைத்தள வாகன பழுதுபார்க்கும் கேரேஜில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த பகுதியானது, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கும் நெரிசலான பகுதி என கூறப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ பரவி, தொழிலாளர்கள் தங்கும் பகுதிகளுக்கும் பரவயிது.

இந்த   தீ விபத்தில் சேதமடைந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து 10 உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 9 பேர் இந்தியத் தொழிலாளர்கள் ஒருவர் பங்களாதேசை சேர்ந்தவர்  என்று தீயணைப்புத் துறை தெரிவித்தது, மேலும் பலர் தீயில் காயமடைந்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  சுமார் 4மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டுள்ளது என கூறிய அதிகாரிகள், இந்த தீவிபத்துக்கு குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.