ரொட்டிக்கு விதிக்கப்படுவது போல் மலபார் பரோட்டா-வுக்கும் 5% ஜி.எஸ்.டி. மட்டுமே விதிக்கவேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மலபார் பரோட்டா மற்றும் கோதுமை பரோட்டா ஆகியவற்றுக்கு 18% ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதாகவும் இவற்றுக்கு ‘பிரெட்’ பாக்கெட்டுகளுக்கு விதிக்கப்படுவது போல் 5% ஜி.எஸ்.டி. மட்டுமே விதிக்கவேண்டும் என்று ‘ரெடி டு குக்’ பரோட்டா தயாரிப்பு நிறுவனம் ஒன்று கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பிரெட் போன்று மாவு, தண்ணீர் மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றை மட்டுமே கொண்டு தயாரிக்கப்படும் பரோட்டாவுக்கு 18% ஜி.எஸ்.டி. விதிப்பது முறையற்றது” என்று வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த எதிர்தரப்பு வழக்கறிஞர், “பிரெட் போன்று மாவு, தண்ணீர் மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றை மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்டாலும் மலபார் பரோட்டா, கோதுமை பரோட்டா மற்றும் சப்பாத்தி ஆகிய உணவுப் பொருட்களை சாப்பிடுவதற்கு முன் சூடாக்க வேண்டும் அதனால் இந்த வகையான உணவுப் பொருட்களை பிரெட் வகையில் சேர்க்க முடியாது” என்று தெரிவித்தார்.
விசாரணையின் முடிவில், “மலபார் பரோட்டா, வீட் பரோட்டா ஆகியவற்றுக்கு பிரெட் வகைக்கு விதிக்கப்படும் 5% ஜி.எஸ்.டி.யே விதிக்கப்பட வேண்டும்” என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.