சென்னை: யாரும் எதிர்பாராத வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் 3 பேர் பாஜகவில் ஐக்கியமாகி இருக்கின்றனர்.
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமது கட்சியை தொடங்கினார்.
தொடங்கிய வேகத்திலேயே தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்தார். மத்திய பாஜகவையும், ஆளும் அதிமுகவையும் ஒரு பிடி,பிடித்தார். அதே பரபரப்பில், லோக்சபா தேர்தலில் களம் இறங்கினார்.
அவரது கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்ய்ம் வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர். சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் யாரும் எதிர்பார்க்காத அளவு வாக்குகளை அள்ளி, அதிர்ச்சி அளித்தனர்.
இந் நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 3 பேர் தம்மை பாஜகவில் ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் ஸ்ரீ காருண்யா, சிதம்பரம் தொகுதி வேட்பாளர் ரவி மற்றும் அரக்கோணம் வேட்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் பாஜகவில் இணைந்து உள்ளனர்.