டில்லி:

தேர்தல் பிரசாரத்தில்  சாதி, மதம் குறித்து பிரசாரம் செய்யும் கட்சியினர் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்க வேண்டும்  தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

17வது மக்களவை அமைப்பதற்காக நாடு முழுவதும்  7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்ட தேர்தல் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் வரும் 18ந்தேதி 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் பல இடங்களில் ஜாதிய உணர்வுகளையும், மத உணர்வுகளை யும் கூறி வாக்குகளை சேகரித்து வருகின்றனர். உ.பி.யில் முதல்வர் யோகி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் ஜாதி, மத ரீதியிலான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக பல இடங்களில் ஜாதி, மத பிரச்சினை மேலோங்கி கலவரங்கள் சூளும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தில் பொதுநல வாக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி  கோகாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் இன்றைய விசாரணையை தொடர்ந்து,  சாதி, மதத்தை கொண்டு தேர்தல் ஆதாயம் காணும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள்  என்று  இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.

விசாரணையின்போது, பதில் அளித்த தேர்தல்  ஆணையம்,  வெறுப்புப் பேச்சுகளை கொண்டு பரப்புரை மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை தனது இயலாமையை தெரிவித்தது.

மேலும், இதுபோன்று பேசும் நபர்களுக்கு வெறும் நோட்டீஸ் மட்டுமே அனுப்ப முடியும். தொடர்ந்து வெறுப்பு பேச்சுகளை பேசினால் அவர்கள் மீது புகார் மட்டும் பதிய முடியும் என்று தெரிவித்து உள்ளது.