சண்டிகர்
பஞ்சாப் மாநில அரசு அமைத்துள்ள மேடையை விடுத்து பிரதமருக்காகத் தனியாக மற்றொரு மேடை அமைப்பது வீண் செலவு என மாநில அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
வரும் 9 ஆம் தேதி அன்று பிரதமர்,மோடி கர்தார்பூர் பாதையைத் திறந்து வைக்கிறார். இந்த பாதை அமைந்துள்ள தேரா பாபா நானக் அருகே இதற்காக ஒரு மேடையைப் பஞ்சாப் அரசு அமைத்துள்ளது. அனைத்து பருவ நிலையையும் தாங்கும் படி அமைக்கபட்டுள்ள இந்த மேடை மற்றும் பந்தலில் இருந்து பிரதமர் மோடி திறப்பு விழாவில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திறப்பு விழாவுக்குப் பிறகு இங்கிருந்து 3 கிமீ தூரமுள்ள சுல்தான்பூர் லோகியில் குரு நானக் 440 ஆம் பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொள்கிறார். இரு நிகழ்வும் ஒரே மேடையில் நடைபெறும் என அரசு தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி பிரதமரின் இரு நிகழ்வுகளும் வேறு வேறு இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இரு மேடைகள் அமைக்கப்பட உள்ளன. இதையொட்டி பஞ்சாப் மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, “பிரதமரின் இந்த நிகழ்வுகள் இரண்டும் தனித்தனியாக இருக்கும் என்பது மாநில அரசுக்குத் தெரியப்படுத்தவில்லை. தற்போது பிரதமர் நிகழ்வுக்காக மற்றொரு மேடை மற்றும் பந்தல் அமைக்க வேண்டி உள்ளது.
பிரதமர் நிகழ்ச்சி நிரல் குறித்து முன் கூட்டியே விவரம் அளித்திருந்தால் மாநில அரசு இந்த பந்தல் மற்றும் மேடையை அனுமதித்திருக்காது. இதற்காகச் செலவிடப்பட்ட பணம் அனைத்தும் தற்போது வீணாகி உள்ளது. பிரதமர் இங்கு வரவில்லை என்பதால் யாரும் இந்த பந்தலை பயன்படுத்தப் போவதில்லை” என தெரிவித்துள்ளார்.