சென்னை:

“தமிழை ஆட்சிமொழியாக்குங்கள்!” என்று பிரதமர் மோடிக்கு தமிழாற்றுப்படை புத்தகத்தின் 10வது பதிப்பு வெளியீட்டு விழாவில் வைரமுத்து வேண்டுகோள் விடுத்தார்.

கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை 10வது பதிப்பபு  அறிமுக விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. நூலினை சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் திருவாசகம் வெளியிட பாடகி சுசீலா பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் சிறப்புரை ஆற்றிய கவிஞர் வைரமுத்து, “வாசிக்கும் பழக்கம் அற்றுக் கொண்டிருக்கிறது என்று யாரும் வருந்தவேண்டாம். நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கும் வழக்கம் தொடங்கி இருக்கிறது. இல்லையென் றால் ‘தமிழாற்றுப்படை’ 90 நாட்களில் 10 பதிப்பு கண்டிருக்க முடியாது என்று கூறினார்.

மேலும், தமிழ் பெருமையுறுவதுபோல் ஒரு தோற்றம் தெரிகிறது என்று கூறியவர், அது மாயமான் தோற்றம் போல் மறைந்துவிடக்கூடாது என்ற கவலையும் வருகிறது. உலக மொழிகளில் 18ம் இடத்திலும், இந்திய மொழிகளில் 5ம் இடத்திலும் தமிழ் திகழ்கிறது. இது வெறும் எண்ணிக்கைக் கணக்குதான்.

தொன்மை, இலக்கியம், வரலாறு, பண்பாடு என அனைத்திலும் தமிழ் மூத்த மொழியாக விளங்குவதால்தான் ஐ.நா. சபையில் பிரதமரால் தமிழை மேற்கோள் காட்ட முடிந்தது. மதிப்பிற்குரிய விருந்தினரே! என சீன அதிபரை தமிழில் விளிக்க முடிந்தது. ஆனால் மேற்கோள் மட்டுமே தமிழை வளர்ந்து விடுமா? என்று அறிவுலகம் ஐயமுறுகிறது
தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் மெய்யன்பு காட்டுவதானால் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட வேண்டும். நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும். அதற்கு முன்னோட்டமாய் மாநிலங்களில் விளங்கும் மத்திய அரசு அலுவலகங்கள் தமிழிலும் இயங்க வேண்டும்.  சமஸ்கிருதத்துக்கும், இந்திக்கும் காட்டப்படும் முன்னுரிமையை மூத்த மொழியான தமிழுக்கும் மத்திய அரசு வழங்க வேண்டும்.

பிரதமர் தமிழ் உச்சரித்ததில் எங்கள் செவி குளிர்ந்தது. ஆனால், இதயத்தை குளிரவைக்க இன்னும் ஏராளம் இருக்கிறது.”

இவ்வாறு அவர் பேசினார்.