பந்தளம்: சபரிமலை மகரவிளக்கு பூஜையொட்டி, அங்குள்ள ஐயப்பன் கோயில் நடை நாளை (சனிக்கிழமை/ டிச.30) மாலை திறக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு 17-ம் தேதி முதல் மண்டல பூஜை தொடங்கி வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெற்று வந்தன. சுமார் 40 நாட்கள் நடைபெற்ற வருடாந்திர மண்டல பூஜை காலம், கடந்த 27-ந் தேதி (டிசம்பர்) மண்டல பூஜையுடன் நிறைவேற்று பெற்றது. இதையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டது.
இந்த நிலையில், மகரவிளக்கு பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை மீண்டும் நாளை (டிசம்பர் 30 – சனிக்கிழமை) திறக்கப்படும் என்று திருவிதாங்கூா் தேவசம் வாரியம் (டிடிபி) அறிவித்து உள்ளது. மகர விளக்கு பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு கோவில் திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
மண்டல பூஜை சமயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதை போன்று மகரவிளக்கு பூஜைக்கும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது.
மகர விளக்கின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 15-ந் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் பல்வேறு சடங்குகள் நடைபெறவுள்ளன. மகரவிளக்கு பூஜையன்று, சுவாமி ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெறும். ஜனவரி 20-ஆம் தேதிவரை கோயில் நடை திறந்திருக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, மண்டல பூஜை தினமான கடந்த புதன்கிழமையன்று ஐயப்பனுக்கு புனிதமான தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.