கடலில் விழுந்த ரஷ்ய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

Must read


சிரியா சென்ற  ரஷ்ய ராணுவ விமானம் கருங்கடலில் விழுந்து மூழ்கியது.  இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி கடலுக்கு அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் விபத்துக்குள்ளான காரணம் விரைவில் தெரிய வரும் என அந்நாட்டு ராணுவ அமைச்சகம்  தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் சோச்சி பகுதியில் இருந்து ராணுவ விமானம் டியூ-154   சிரியா நாட்டிலுள்ள லடாக்கியா என்ற ஊருக்கு புறப்பட்டு சென்றது. அதிகாலை புறப்பட்டுச் சென்ற இந்த விமானத்தில் ரெட் ஆர்மி கொயர் என்ற ரஷ்ய ராணுவத்தின் பிரபல  ராணுவ இசைக்குழுவினர் 60 பேர் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.  மேலும்  ராணுவ வீரர்கள், பத்திரிகையாளர்கள் என மொத்தம் 91 பேர் பயணித்தனர்.

விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விமானம் என்ன ஆனது என்பது  குறித்து தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
கருங்கடல் பகுதியில்  விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதை அந்நாட்டு  ராணு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
இதையடுத்து விமான பாகங்களையும், விபத்தில் பலியானவர்களையும்  தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் பணியில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 109 பேர் ஆழ்கடலில் மூழ்கும் நீச்சல் வீரர்கள்.மேலும் அதி நவீன கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் தேடல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பலியானவர்களில் 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரஷ்யாவில் நேற்று தேசிய துக்க தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்த விபத்துக்கு பயங்கரவாதிகளின் சதித்திட்டம் காரணமாக இருக்கமலாமோ என்ற கருத்து நிலவியது. ஆனால் இதை ரஷ்ய அரசு மறுத்துள்ளது. விமானியின் தவறு, தொழில்நுட்பக் கோளாறு, எரிபொருளில் கோளாறு, என்ஜினில் ஏதேனும் அந்நிய பொருள் சிக்கியது ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுதான்  விபத்துக்கு  காரணமாக இருக்கும் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆழ்கடலில் தேடுதல் பணி நடந்தபோது, விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. ஆகவே விபத்துக்கான காரணம் விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

More articles

Latest article