மைசூரு

மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் காங்கிரஸ் மகளிர் அணியினர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு மைசூரு மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். அம்மனுக்கு ஆடி மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் தசரா திருவிழா நடைபெறும் நாட்களில் சிறப்பு பூஜை நடந்து வருகிறது.  பூஜையில் அரசியல் பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வருகிறார்கள்.

நேற்று மாநில காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எனவே காங்கிரஸ் தேசிய மகளிர் அணித் தலைவி நெட்ட டிசோஜா, மாநில காங்கிரஸ் கட்சி தலைவி புஷ்பா அமர்நாத் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் மகளிர் அணியினர் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.

அனைவரும் சாமுண்டி மலை அடிவாரத்தில் இருந்து மலையின் உச்சி வரை உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட படிக்கட்டுகளில் வேண்டுதலை நிறைவேற்ற நடந்து சென்று படிக்கட்டுகளில் தேங்காய்களை உடைத்தனர். படிக்கட்டுகளில் காங்கிரஸ் மகளிர் தொண்டர்கள் பூஜை செய்த பின்னர் அவர்கள் சாமுண்டீஸ்வரி அம்மனுக்குச் சிறப்பு பூஜை நடத்தினர்.

அவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் ஆகியோர்களின் பெயர்களில் அர்ச்சனை செய்தனர். காங்கிரஸ் கட்சி மற்றும் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 5 ஆண்டுகள் சுமுகமாக நடக்க வேண்டும் என அவர்கள் வேண்டினர்.