சென்னை:

வீடியோ கால் மூலம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மாநில அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். சென்னைக்கு புதிய போலீஸ் கமிஷனராக அமலாக்கப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார். சென்னை மாநகர 107வது கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்கனவே கமிஷனராக இருந்த ஏ.கே. விஸ்வநாதன் புதிய ஆணையர் மகேஷ்குமாரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விடைபெற்றார். பின்னர் முறைப்படி மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

பின்னர் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக என்னை நியமித்த தமிழக முதல்வருக்கு நன்றி. கொரோனா காலம் என்பதால் பொதுமக்கள் நேரில் வந்து புகார் அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தினமும் அல்லது வாரம் இருமுறை நேரடியாக என்னிடம் வீடியோ கால் மூலம் புகார் அளிக்கலாம்.

சென்னையில் 20,000 காவலர்கள் பணியில் உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அவர்களின் நலன்களில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும். மன அழுத்தம் உள்ள காவலர்களை தனியாக பிரிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு இதற்காக பயிற்சி கொடுக்கப்படும். அந்தப் பயிற்சியானது வருகின்ற 10ம் தேதியிலிருந்து சுழற்சி முறையில் வழங்கப்படும்.

செயின் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்களை குறைக்க திட்டம் வகுக்க உள்ளோம். ஏற்கனவே தனியாக அமைக்கப்பட்ட தனிப்படை ஆயிரக்கணக்கான செல்போன்களை மீட்டுள்ளனர். அதே போல் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க நிலையான வழிகாட்டு முறையயை வகுக்க உள்ளோம். இந்த குற்றங்களில் குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவர் நேரடி தொடர்பில்லாததால் விழிப்புணர்வு மூலமாக குற்றங்களை தடுக்கலாம். மேலும் ஆர்.பி.ஐ மற்றும் காவல் துறைக்கு 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் பணம் இழப்பை தவிர்க்கலாம்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களை தவிர்க்க, எங்கு குற்றங்கள் அதிகம் நடைபெறுகிறது என கவனித்து அதை குறைக்க கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.