பாட்னா: பீகாரில் மகாத்மா காந்தி சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கிய பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. போதை ஆசாமிகளால் சிலை உடைக்கப்பட்டு இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகாரின் கிழக்கு சம்பாரனில் மோதிஹாரி பகுதியில் வெள்ளையர்களுக்கு எதிராக மகாத்மா காந்தி சத்தியாக்கிரக போராட்டம் தொடங்கிய மைதானம், தற்போது ராட்டை பூங்காவாக உள்ளது. இந்த பூங்காவில் சிஎஸ்ஆர் நடவடிக்கையின் கீழ் கட்டப்பட்ட மகாத்மா காந்தியின் சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த அருகே போதைக்கு அடிமையானவர்களால் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
1917-ம் ஆண்டு பீகார் மாநிலம் சம்பாரனில் சத்தியாகிரக இயக்கத்தை தொடங்கினார். அதை நினைவுகூரும்விதமாக இங்குள்ள ராட்டை பூங்காவில் காந்தியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை நேற்று முன்தினம் இரவு உடைத்து கீழே தள்ளப்பட்டிருந்தது. காந்தியின் கை உடைந்து நொறுங்கி உள்ளது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்தை பார்வையிட்ட கிழக்கு சம்பாரன் மாவட்ட மாஜிஸ்திரேட்டு ஸ்ரீசாத் கபில் அசோக், ‘காந்தியின் சிலையை உடைத்தவர்களை காவல்துறையினர் தேடி வருவதாக கூறினார். அவர்களுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரப்படும்.
உடைக்கப்பட்ட காந்தி சிலை மாவட்ட நிர்வாகத்தால் மீண்டும் நிறுவப்படும் என உறுதி அளித்தவர், இந்தப் பூங்காவில் கண்காணிப்பு கேமராவை அமைப்பதோடு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.