சென்னை: மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, சென்னை கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள காந்தியின் சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிலையின் கீழே அவரது உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது.
காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், தியாககிகள் என பலரும் மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அகிம்சை – சகோதரத்துவம் என மானுட சமுதாயத்திற்கு இன்றியமையாத பண்புகளை வாழ்வின் நெறியாகக் கொண்டு வாழ்ந்து நமக்குக் கற்பித்த மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள்! தேசத் தந்தை காட்டிய நல்வழியில் நாமும் நாடும் நடைபோடுவதே இன்றைக்கும் என்றைக்கும் தேவையாகும்! சகோதரத்துவத்தை வளர்ப்போம்! என கூறியுள்ளார்.