மும்பை
மகாராஷ்டிரா சட்டசபை மேலவையில் காலியாக உள்ள இடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கக் கோரி ஆளுநர் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்ற ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் கடும் குழப்பம் ஏற்பட்டது. சிவசேனா கட்சியுடன் தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. முதல்வராகப் பதவி ஏற்ற சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே எம் எல் ஏ மற்றும் எம் எல் சி இல்லை என்பதால் ஆறு மாதங்களுக்குள் அவர் ஏதாவது பதவியில் அமர வேண்டும்.
உத்தவ் தாக்கரே பதவி ஏற்று வரும் 27 ஆம் தேதியுடன் ஆறு மாதங்கள் நிறைவு பெறுகிறது. எனவே அவர் உடனடியாக எம் எல் ஏ அல்லது எம் எல் சி ஆக வேண்டிய நிலை உள்ளது மகாராஷ்டிராவில் 9 எம் எல் சி இடங்கள் காலியாக உள்ளன. கடந்த 24 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் உத்தவ் தாக்கரே போட்டியிட முடியவில்லை.
மகாராஷ்டிர அமைச்சரவை கூடி உத்தவ் தாக்கரேவை ஆளுநர் நியமன ஒதுக்கீட்டில் எம் எல் சி ஆக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அவர் முடிவை இழுக்கடித்ததால் முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியுடன் தொலைப்பேசியில் உரையாடி இது குறித்து வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் மகாராஷ்டிர ஆளுநர் கோஷ்யாரி காலியாக உள்ள எம் எல் சி இடங்களுக்கு உடனடியாக தேர்தல் அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி பிரச்சினை ஒரு முடிவுக்கு வர உள்ளது.