கமத் நகர்

சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து கொன்ற மூவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோபர்டி என்னும் கிராமத்தில் 15 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் படித்து வந்தார்.  கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதி அவர் அருகில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு செல்லும் வழியில் அப்பகுதிய சேர்ந்த 3 வாலிபர்கள் பைக்கில் அவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.

பிறகு அந்தப் பெண்ணை ஆளில்லாத ஒரு இடத்துக்கு கூட்டிச் சென்று கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.  அந்த சிறுமி தங்களைக் காட்டிக் கொடுத்து விடுவாளோ என்னும் பயத்தில் அவருடைய கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.  இந்த நிகழ்வு மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.  இந்த சம்பவத்தை எதிர்த்து சிறுமியின் சமூகத்தினர் பல போராட்டங்களை நிகழ்த்தினர்.

அத்துடன் இந்த கொடூர சம்பவத்துக்கு தார்மீக ரீதியில் பொறுப்பேற்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவி விலக எதிர்க்கட்சிகள் போராடினர்.  வழக்கில் ஜிதேந்திரா பாபுலால் ஷிண்டே (வயது 25) , சந்தோஷ் கோரக் பாவல் (வயது 30) மற்றும் நிதின் கோபிநாத் (வயது 23) ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.  இவர்கள் மீது, கொலை, பலாத்காரம், குற்றச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த மாதம் 18ஆம் தேதி அன்று இவர்கள் மூவரும் குற்றவாளி என அறிவிக்க்கப்பட்டனர்.  இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.  தீர்ப்பில், “இந்த நிகழ்வு மிகவும் கொடூரமானது.  அரிதினும் அரிதான இது போன்ற குற்றங்கள் மேலும் நிகழாமல் இருக்கௌ இவர்கள் மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது” என அறிவிக்கப்பட்டது.

தீர்ப்புக்கு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.