புதுடெல்லி:
சிவசேனா தொடர்பான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் 2019-ம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. இருப்பினும் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வதில் இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாஜக- சிவசேனா கூட்டணி முறிந்தது.

சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வரானார்.

உத்தவ் தாக்கரே அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் தொடக்கம் முதலே பாஜக படுதீவிரமாக வியூகம் வகுத்து வந்தது.

சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டேவை வளைத்த பாஜக கொத்தாக சிவசேனா எம்.எல்.ஏக்களையும் அள்ளியது. சிவசேனா கட்சியின் மொத்தம் 57 எம்.எல்.ஏக்களில் 40 பேர் ஏக்நாத் ஷிண்டேவை ஆதரித்தனர். இதனால் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்க்கப்பட்டது.

இதனையடுத்து ஏக்நாத் ஷிண்டேவை பாஜக முதல்வராக்கி கூட்டணி அரசில் பங்கேற்றது. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

இதில் ஒன்று, சிவசேனாவை சேர்ந்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏக்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பானது. 16 எம்.எல்.ஏக்களை அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு தகுதி நீக்கம் செய்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.

இவ்வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில், கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சுக்கு மாற்றி தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.