மும்பை: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கின் காவல் 22ந்தேதி வரை நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததில் மகாராஷ்டிர சிறுபான்மையின விவகாரங்கள் அமைச்சா் நவாப் மாலிக்குக்கு தொடா்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரை அமலாக்கத் துறையினா் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர்.  தொடர்ந்து, தெற்கு மும்பை பெல்லாா்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து அமைச்சா் நவாப் மாலிக்கிடம் அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அமலாக்கத் துறையால் அவர் கைது செய்யப்பட்டவரை மும்பை உயர் நீதிமன்றம் நீதிமன்ற காவலில் இருந்து விடுவிக்க மறுத்துவிட்டது. கடந்த மார்ச் 7-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் இருந்த நவாப் மாலிக்கை மார்ச் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, நீதிமன்றக் காவல் ஏப்ரல் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்றக் காவல் ஏப்ரல் 22-ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டது.