மும்பை:

நாட்டிலேயே முதன்முறையாக  அரசு போக்குவரத்து கழக டிரைவர் வேலைக்கு பழங்குடியின பெண்களை மகாராஷ்டிர மாநில அரசு தேர்வு செய்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பழங்குடியின மக்களும் பொருளாதாரத்தில் மேன்மை அடைய வேண்டும் என்ற நோக்கில், மகாராஷ்டிர மாநில அரசு பழக்குடியின மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன் ஒருபகுதியாக பழங்குடிய இனத்தை சேர்ந்த  பெண்களுக்கு வாகன ஓட்டப் பயிற்சி கொடுத்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது.

வாகனம் ஓட்டுனர் பயிற்சி பெற   மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், 163 பெண்களை தேர்வு செய்துள்ளது.  அவர்களுக்கு பயிற்சி கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயிற்சியை முடித்ததும் அவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்பட்டு அரசு பணியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிர மாநில போக்குவரத்து கழகத்தின் இந்த முயற்சியை முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தொடங்கி வைத்து பேசினார். அப்போது, “பெண் டிரைவர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நீண்ட தொலைவுக்கு பெண் டிரைவர்களை அனுப்ப கூடாது. இரவு நேரத்தில் சில இடங்களில் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், தங்குவதற்கு பாதுகாப்பான இடம் வழங்க  ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று மாநில அரசை கேட்டுக்கொண்டார்.